நீட் ஏன் கூடாது, ஏன் அது ஒரு துரோகம் என்பது குறித்து ஏற்கெனவே பலமுறை பலவாறு எழுதிவிட்டார்கள். ஆனால், இப்பொழுதும் நீட் பற்றி சாதாரணமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நீட்டை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மைக்கு நிஜமாகவே அதன் பாதகங்கள் தெரியவில்லை என்பதுதான் கொடுமை. அதன் அடிப்படை துரோகம் தெரிந்தே அதை ஆதரிப்பவர்களை ஒதுக்குவோம். அவர்களிடம் விளக்கிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.
நீட் குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் குழம்பிப் போகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நீட் ஒரு சாதாரண நுழைவுத் தேர்வு என்பதாகத் தான் தோன்றும். அதை வைத்து, நீட் அவசியமான ஒன்றாகவும், நன்றாகப் படிக்கிற மாணர்வர்கள் அதில் தேர்ந்து விடுவார்கள் என்பது போலவும் கூறி, நீட்டை எதிர்பவர்கள் ஏதோ முட்டாள்கள் போலவும் நிறையப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலமாக எளிமையாக ஏமாறும் மக்களிடம் உழைப்பே உயர்வு தரும், உழைக்க மறுக்கிற, சோம்பேறிகள் தான் நுழைவுத் தேர்வை எதிர்க்கிறார்கள் என்பதாகப் பிரச்சாரம் செய்து, அது ஒன்றும் பெரிய துரோகம் இல்லை என்பதாகவும் நம்ப வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சரி, நீட் தேர்வை ஏன் ஒரு துரோகமாகப் பார்க்க வேண்டும்? இது வரையிலும் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகளைக் கேட்கப் போகிறார்கள். நன்றாகப் படித்த மாணவர்கள் அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்விகள் எல்லாமே நியாயமாகத் தான் தோன்றும். தவிரவும், உலகம் எங்கோ, எத்தனையோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் இன்னும் ஒரு நுழைவுத் தேர்வுக்குக் கூட தகுதியில்லாமல் அது வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகளும் நியாயமாகவே தோன்றும்.
2006 ஆம் ஆண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் இருந்தன. அதை ஏன் தேவையில்லாத ஒன்றெனத் தடை செய்தார்கள், அது எவ்வாறு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுகளில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்து கொள்வதில் துவங்குகிறது நீட் ஏன் துரோகம் என்பதற்கான பதில். நுழைவுத் தேர்வினைத் தடை செய்தது ஏன் சமூக நீதி என்பது புரிந்தால் நீட்டை எதிர்க்கத் துவங்குவோம்.
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களினால் இது போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாது என்கிற போது அவர்களால் எப்படி அந்தப் படிப்புக்களில் நிபுணராக முடியும் என்கிற புது வகையான கேள்வியும் பிறக்கும். அதில் தவறில்லை. இதில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை, இது போன்ற வடிகட்டுத் தேர்வுகளுக்காக ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, சில லட்சங்களைச் செலவு செய்து தனியாகப் பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுடன், அந்த வாய்ப்புக்கள் அமையப்பெறாத மாணவர்களும் போட்டியிடுவது எந்த வகையிலும் அறமல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.
நுழைவுத் தேர்வுகளுக்கு விலக்குக் கோருவதன் மூலமாக நாம் நமது மாணவர்களின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றெல்லாம் எப்போதும் எண்ண வேண்டிய அவசியமே இல்லை. நுழைவுத் தேர்வுகளுக்காக மட்டுமே பல லட்சங்களைச் செலவிடக் கூடிய சொகுசு வாய்ந்த மாணவனையும், பொதுத் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய சில ஆயிரம் ரூபாய்களுக்கு அல்லல்படும் மாணவர்களையும் நாம் அறிவோம். நீட் போன்ற தேர்வுகள் மிக எளிதாக இந்த மாணவர்களின் போட்டியிடும் மனப்பான்மையையே உடைத்துப் போட்டுவிடுகின்றன. ஏனென்றால், தன்னைச் சுற்றிலும் தான் பார்க்கும் ஓரளவு வசதி படைத்த மாணவர்கள் பெரும் தொகையினைச் செலுத்தி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது, தன்னால் அது இயலாமல் போகிறதே என்ற பயம் அவர்களை அறியாமலேயே ஒரு தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் என்பதெல்லாம் ஆயிரத்தில், லட்சத்தில் ஒன்று தான். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் அல்ல.
பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தான் பெறுகின்ற மதிப்பெண்களே அடுத்து வரும் மருத்துவப் படிப்பிற்குப் போதுமானது என்கிற உந்துதலில் படிக்கும் போது அவர்களால், அந்தக் கனவினை நோக்கித் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்திப் போட்டியிட முடியும். ஆனால், அதைத் தாண்டியும் ஒரு தடை, ஒரு வடிகட்டல் நிகழும் என்பதே அவர்களது உத்வேகத்தைக் குறைத்து கல்வி மீதான நாட்டத்தைக் குறைக்கச் செய்துவிடும். எப்படிப் படித்தாலும் நாம் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதில் துவங்கி, எதற்காகப் படிக்கிறோம் என்ற கேள்வியில் போய் நிற்கும். அதன் பிரச்சினை என்னவென்றால், நாம் விரும்பியதைப் படிக்க முடியாவிட்டால் எதற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை மறைமுகமாக விதைத்துவிடும்.
பனிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு நமக்குப் பிடித்ததைப் படிக்கலாம் என்று முழு மூச்சாகப் படித்து, அதில் தோல்வியுற்றாலும் கூட இதர மருத்துவப் படிப்புக்களையோ அல்லது பொறியியலோ அல்லது அறிவியல் படிப்புக்களுக்கோ செல்கிற வாய்ப்பும், பக்குவமும் கூட அவர்களுக்கு வந்துவிடலாம். ஆனால், நீட் போன்ற தேர்வுகள் ஒரு குறுக்கீடாக நின்று கொண்டிருக்கும் போது பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பிலேயோ அல்லது அதற்கும் முன்னதாகவோ கூட இடை நின்று கல்வியில் இருந்து விலகிச் சென்றுவிடவும் அநேக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக கல்விக்காகவும், நமது மாணவர்களுக்காகவும் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அவர்களைச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் நமது மாநிலத்தின் முன்னேற்றம் ஒரே ஒரு தேர்வின் மூலமாகப் பின்னால் செல்லக் கூடிய அபாயமும் இருப்பதாகவே உணர்கிறேன்.
ஒரு நுழைவுத் தேர்விற்குப் பயந்துவிட்டு எல்லோரும் படிப்பதை நிறுத்திவிடுவார்களா என்ற கோணம் கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம். நமது நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களின் ஒரே இலக்கு தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கிவிட வேண்டும் என்பது மட்டும் தான். அதிலும், தங்களது சம்பாத்தியத்தில் பெரும் தொகையைப் பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே செலவழித்துவிட்டு, அதற்காகத் தங்களது எத்தனையோ அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யாமல் வாழும் குடும்பங்கள் அதிகம். இவர்களுக்கும், இவர்களுக்குக் கீழ் நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கும் நீட் மிகப் பெரிய அச்சுறுத்தல் தான்.
இரண்டு வருடங்களாக நீட் தேர்விற்குத் தயாராகிவரும் சில மாணவர்களை நான் அறிவேன். அவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் இந்த இரண்டு வருடங்களோ சில லட்சங்களோ ஒரு பொருட்டே அல்ல. ஒருவேளை இன்னும் ஓரிரு வருடங்கள் செலவழித்துத் தோற்றுப் போனாலும் அது எந்த வகையிலும் அவர்களது பொருளாதார, எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கப் போவதில்லை. ஆனால், ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் மாணவனுக்கு இந்தச் சொகுசு எப்போது வாய்க்கப் போவதில்லை. அவன் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு ஆண்டும் அவனது உயர்கல்வியை, உயர் கல்விபெறும் வாய்ப்பினை கடுமையாகப் பாதிக்கக் கூடியதுதான்.
பல தலைமுறைகளாக மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகிவரும் ஒரு குடும்பப் பிண்ணனியில் ஒரு மாணவர் மருத்துவராவது பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். அதுவே முதல் தலைமுறையில், முதல் முதலாகப் பள்ளிக்கு வந்து, மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகிற மாணவர் தான் சார்ந்த சமூகத்தை மொத்தமாக கல்வியின் பக்கமாக இழுத்துவரும் சங்கிலியின் முதல் கண்ணி ஆகிறார். அவரைத் தொடர்ந்து நிச்சயமாக எத்தனையோ மாணவர்கள் அவரது சுற்றத்தில் படிக்க வேண்டும் என்னும் உத்வேகமடைவார்கள். அந்த அண்ணனைப் போல, அந்த அக்காவைப் போல நானும் மருத்துவராவேன் என்னும் கனவினை அவர்களுக்குள் உருவாக்கும் அதி முக்கியமான கண்ணி அது. அந்தக் கண்ணிகளைத் தான் நீட் என்னும் பெயர் கொண்டு தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் தலைமுறையில் படித்து மேலே வரும் மாணவர்களில் ஒரு சிலரேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து மேலே வரவில்லையானால் அவர்கள் சுற்றத்தில் படித்து மட்டும் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியை ஆழமாகப் பதியவைக்கும் முதல் கண்ணியாகவும் அவர்களே மாறுவார்கள்.
நாம் நம் மாணவர்களை எந்தக் கண்ணியாக மாற்றப் போகிறோம்?
No comments:
Post a Comment