Monday, January 26, 2015

இரவு - எலீ வீசல்

ஒரு ஊரில் ஒரு எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

(மேற்கண்ட கவிதை காலச்சுவடு ஜூலை 2014 இதழில் பிரசாந்தி சேகர் அவர்கள் எழுதிய ஔஷ்விற்ஸ் கவிதைகள் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது)

உலகின் மிகப் பண்பட்ட மக்களைக் கொண்ட தேசங்களாகப் போற்றப்படும் ஐரோப்பியர்களின் இனவெறிப் போராட்டத்தினை யாரும் மறந்திருக்கமுடியாது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னதாக இரண்டாம் உலகப் போர் துவங்கி முடியும் வரையிலும் (1941 - 1945) ஐரோப்பாவில் இருந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் - 60 லட்சம் பேர் - ஹோலோகஸ்ட் என்னும் அழித்தொழிப்பு முறையினால் தகன உலைகளிலும், விஷவாயுக் கூடங்களிலும் கொல்லப்பட்டனர். ஹிட்லர் தனது பிரசங்கங்களின் மூலமாக  இனவெறியை மக்களிடம் தூண்டிவிட்டதுடன் ஆரியர் அல்லாத யூதர்கள், ரோமானியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் முற்று முழுதாக ஐரோப்பாவில் இருந்து அழிக்கப்பட வேண்டுமென ஆடிய பேயாட்டம் ஒரு கோடிக்கும் மேலான அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கியது.


நேரடியாக sound cloud ல் கேட்க இங்கே தொடவும்.

தனது பதினைந்தாவது வயதில் தனது சொந்த ஊரிலிருந்து ஆஸ்விட்ஸ் வதை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டத்திலிருந்து, புனா மற்றும் புச்சன்வால்ட் வதை முகாம்களில் தானும் தனது குடும்பமும் எதிர்கொண்ட கொடுமைகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் எலீ வீசல். ஆஸ்விட்ச் வதை முகாமில் தன் கண்ணெதிரிலேயே தனது தாயும், இளைய சகோதரி ஜிபோராவும் தகன உலைக்கு எரிபொருளாவதைக் காண நேர்ந்ததது முதல் தனது தந்தையின் மரணத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு ஆன்மா அழிந்துபோய் ஒரு வயிராக, பசியெடுக்கும் வயிராக மட்டுமே வாழ்ந்த நிஜத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாஜிப் படையினரின் இன அழிப்புப் பேயாட்டத்தினை இரவு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. கற்பனையும் செய்ய முடிந்திராத அளவிற்கு மனிதர்களுக்குள் இத்தனை வன்மம் இருக்கமுடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்த பக்கங்களில் அதனை விடக் கொடூரமான சம்பவங்களைப் படிக்க நேரும்போது இதனை நிகழ்த்தியவர்கள், நிகழக் காரணமாயிருந்தவர்கள் என எல்லோருமே மனிதர்களாகவே இருக்கமுடியாதென்ற வெறுப்பும், பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது.

தகன உலைகளில் உயிருடன் மனிதர்களைப் போடுவது, குழந்தைகளை மேலே வீசியெறிந்து சுட்டு வீழ்த்துவது, விஷவாயுக் கூடங்களில் மனிதர்களை அடைத்துக் கொல்வது, பட்டினியால் இறக்க விடுவது, கடும் குளிரில் நிர்வாணமாக நெடுந்தொலைவு நடக்கவிடுவது, நடக்க இயலாதவர்களைச் சுட்டு வீழ்த்துவது, கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலில் மிக நெருக்கமாக மனிதர்களை அடைத்து வைத்து தொடர்ந்து பயணம் செய்ய வைப்பது, நெரிசலில் இறந்தவர்களை அங்கங்கே வயல்வெளிகளில் வீசிவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என்பதாக நாஜிப் படைகள் செய்த கொடுமைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் இந்த நூலினைப் படித்து முடித்துவிடுவதென்பது அசாதாரணமானது. பக்கங்கள் குறைவுதானென்றாலும் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் கற்பனை செய்து பார்க்கையில் அதற்கு மேலும் தொடர்ந்து வாசிப்பதென்பது சாத்தியமற்றதாகிறது. பூமி உருவான காலத்திலிருந்தே கூட இப்படியொரு பேரழிவினை யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாதென்பதுதான் உண்மை.

எலீ வீசலின் இந்த நூலினைத் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ரவி இளங்கோவன். யுனைட்டட் ரைட்டர்ஸ் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்கள். விலை ரூ.70. பக்கங்கள் : 126. ( பின்ணினைப்பான நாஜி வதைமுகாம் குறித்த ஓவியங்கள் தவிர்த்து )