Monday, September 20, 2021

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

மயிலன் எழுதி கடந்த ஆண்டு உயிர்மை பதிப்பகத்தின் வழியாக வெளியான ”பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்” நாவலை வாசித்து முடித்தேன்.

சந்தேகமே இல்லாமல் தமிழின் மிக முக்கியமான/அவசியமான படைப்பு. புனிதப்படுத்தப்பட்ட எந்த ஒரு அமைப்பிற்குள்ளும் இருக்கும்/ இயங்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அதே உலகில் அங்கம் வகிக்கும் ஒருவர் சுய விமர்சன அடிப்படையில் எழுதிய நாவலாக மட்டும் இதனைப் பார்க்க வேண்டியதில்லை.

உடற்கூறாய்வு என்று தலைப்பிட்டுவிட்டு மொத்த மனிதர்களின் மனதினையும், எண்ண ஓட்டங்களையும் பகுத்துப் பகுத்து கூறாய்வு நிகழ்த்தியிருக்கிறார். முதுநிலை அறுவை சிகிச்சை மாணவரான பிரபாகரின் தற்கொலைக்கான காரணங்களை அவரது சக மாணவர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு புலனாய்வு செய்யும் விதமாகக் கதை பயணமாகிறது.

பிரபாகரின் தற்கொலைக்கான காரணங்களாக அவரோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதரின் அனுமானங்களைப் பதிவு செய்ய ஆரம்பிக்கிறார். நமது அனுமானங்கள் எல்லாமும் நமது மனவிரிவின், எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடுகள் தான். எந்த ஒரு தேவையும் இல்லாமலேயே சக மனிதர்களை நாம் போட்டியாக, எதிராளியாக நினைத்துக் கொள்கிறோம். நம்முடனேயே இருக்கும் இன்னொரு மனிதனின் வெற்றியில் மகிழ்வதற்குப் பதிலாக, போட்டியையும் பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறோம். அந்தப் பொறாமை வெற்றி பெற்ற மனிதரின் மீதான வெறுப்பாக மாறி, பழி உணர்ச்சியாக ஆழப் பதிந்து, மனதிற்குள்ளேயே வளர்ந்து, வெளியே வருவதற்கான சமயத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. 

எந்தத் துறையாக இருந்தாலும் நம்மால் இயலாத ஒன்றைத் தங்களது அயராத உழைப்பின் மூலமாகவும், திறமையின் மூலமாகவும் வளர்த்துக் கொண்ட நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்போடும் ஈடுபாட்டோடும் சம நிலையில் போட்டியிட முடியாத பெரும்பாலானவர்கள் நிறைந்தது தான் பொதுச் சமூகம். இதில் முதலிடத்தைப் பிடிக்கும் எந்த ஒரு தேவையும், உள்ளார்ந்த விருப்பமும் இல்லாதவர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். முதலிடத்திற்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போகும், எப்போதும் இரண்டாம் மூன்றாம் இடத்திலேயே இருக்கிற மனித மனங்களின் குணாதிசயங்களைப் பற்றி சதாசிவத்தின் கதாப்பாத்திரம் வாயிலாக மிகத் தெளிவாக, விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். இது மருத்துவத் துறை என்று மட்டும் இல்லை. வெற்றி பெற்ற மனிதர்களைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான, அவர்களது ஆளுமையைச் சிதைக்கும் வகையில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா வகையான வதந்திகளுக்கும் இப்படியான இரண்டாம் நிலையில் இருப்பவர்களே காரணமாக இருக்கிறார்கள். இதன் மூலமாக அப்படி மோசமான நடத்தையோ அல்லது தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் தான் அந்த நபர் முதலிடத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் அந்த இடத்தில் இருக்க வேண்டியவன் நான் தான் என்று தன்னைச் சார்ந்தவர்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை - அது தேவையில்லாத போதும் கூட- அவர்களே உருவாக்கி, அதற்காகவே வாழவும் செய்கிறார்கள். 

இது தவிர, மனித மனங்களில் ஏற்பட்டும் எண்ணற்ற குழப்பமான உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுத்து, கதாப்பாத்திரங்களாக்கி அவற்றைத் துல்லியமாகவும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். வெறும் வென்ஃப்லான் போட்டுவிட்டதற்காக உண்மையாகவே துயருறும் பாஸ்கரும், ஒருவகையில் பிரபாகரின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அன்வரும் நம்மோடுதான் இருக்கிறார்கள். 

ஒரு தற்கொலைக்கு அதுவும் தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதிவைத்துவிட்டுச் செல்லாத ஒரு தற்கொலைக்கு எத்தனை வித விதமான அனுமானங்கள் இருக்கின்றன என்பதை புலனாய்வு நாவலின் விறுவிறுப்புடன் வாசிக்க முடிகிறது. 

மயிலனின் மொழி நடை நாவலுக்கும், கதைக் களத்திற்கும் வலுவூட்டுவதாகவே இருக்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் பிரபாகரின் கோணத்தில் எழுதப்பட்ட பீடிகை அத்தியாயத்தில் இருந்தே அதனை ரசிக்கமுடிகிறது. 

“பழிவாங்கப்படுபவர்கள் எல்லோருமே இங்கே எதிரிகள் அல்லது பழி வாங்குபவர்கள் எல்லோருமே இங்கு நாயகர்கள். எப்பேர்ப்பட்ட பச்சை அயோக்கியத் தனம்? நாயகன் குண்டடி பட்டாலும் செத்துவிடக் கூடாது. செத்துப் போகிறவர்களுக்கு இங்கே நாயக அந்தஸ்த்தே கொடுக்கப்படமாட்டாது.”,

“தகனம் செய்யப்பட்டுவிட்ட துயரத்துடன் நான் ஏன் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறேன்?” 

“ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதைவிடவும், அவர் வலிந்து ஜோடித்துச் சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும்போதுதான் அவர் அதிகம் சீண்டப்படுகிறார்”

இப்படியாக நாவல் முழுதுமே அடிக்கோடிட்டு வாசித்த வரிகள் அனேகம். 

மருத்துவத் துறைக்குள் நிகழும் அதிகார வெறியும், மறைமுக மிரட்டல்களும் மருத்துவத் துறைக்கு வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட சுயசரிதையின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் எழுத்தாளர் அனுமதிக்கும் புனைவின் எல்லையைத் தாண்டி யோசித்தாலுமே மயில்சாமி போன்றவர்கள் நிச்சயமாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மருத்துவத் துறையில் காலூன்றி, வேர்விட்டுப் பத்தாண்டுகளைக் கடந்திருந்தாலும் கூட மயில்சாமியைப் போன்ற அதிகார வெறிபிடித்தவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம் வாய்க்கவில்லை என்பதில் உண்மை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. 

பொதுவாக இலக்கியத்தரமான புத்தகம் என்று சொல்லப்படும் பெரும்பாலான படைப்புகள் சாதாரண வாசகர்களை விரட்டியடிக்கும் மொழியில், உள்ளடக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், மயிலனின் இந்த நாவல் இலக்கியப் பிரதி என்ற மதிப்பீட்டுடன் சந்தேகமே இல்லாமல் விறுவிறுப்புடனும் வாசிக்க முடிகிற புள்ளியையும் தாண்டிச் செல்கிறது. அந்த வகையிலும் இது சிறப்பான படைப்பாகவே இருக்கிறது.


புத்தகம் : பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்.

ஆசிரியர் : மயிலன் ஜி.சின்னப்பன்.

பதிப்பகம் : உயிர்மை.

விலை : 250.