Tuesday, October 6, 2015

டாலர் தேசம்

"கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டினை வீசியது. பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்டை நிறுவினார். ஒசாமா பின்லேடன் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்." ஒரு ட்விட்டில் அடங்கிவிடக்கூடிய இவைதான் டாலர் தேசம் புத்தகத்தைப் படிக்கும் முன்பாக எனக்குத் தெரிந்த அமெரிக்காவின் வரலாறு.

"அமெரிக்கா உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு. பூலோக சொர்க்கம். அங்கே மட்டும்தான் மாதம் மும்மாரி பொழிகிறது. அமெரிக்காவில்தான் சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருமுறையேனும் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வருவதுதான் பிறப்பின் அர்த்தம்." இதெல்லாம் என்னைச் சுற்றிலுமுள்ளோரின் அமெரிக்கப் புரிதல்கள். 

அதெப்படி ஒரு தேசம் உலகெங்கிலுமுள்ளோரின் ஒரே விருப்பத் தேர்வாக இருக்கிறது? வெறும் 500 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவால் எப்படி இந்த மாபெரும் வளர்ச்சியை எட்டமுடிந்தது? அதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு யாருடையது? அந்த தேசத்தின் மக்களின் உழைப்பா அல்லது ஆட்சியாளர்களின் அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கைகளா ? ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்ததா? இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் யாதொரு தொடர்புமில்லாதிருக்கும்போது ஏன் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்று அழைக்கிறார்கள்? இது தவிரவும் நமக்கிருக்கும் அமெரிக்கச் சந்தேகங்களுக்கு விடை சொல்கிறது டாலர் தேசம்.

பொதுவில் நமக்குத் தெரிந்த பளபளக்கும் அமெரிக்காவின் பின்னால் இருக்கும் அழுக்குகள், அது எதிர்கொண்ட பிரச்சினைகள், தடுமாறித் தலைகுப்புற விழுந்து முகம் பெயர்த்துக் கொண்ட சம்பங்கள் என்று நமக்குத் தெரியாத, நாம் நினைத்துப் பார்த்திராத மொத்த அமெரிக்காவின் வரலாற்றையும் அமெரிக்கா உலகின் வல்லரசான அதே ஜெட் வேக எழுத்து நடையில் வாசிக்கமுடிகிறது.

இரண்டாம் உலகப்போர் காலங்களில் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசித் தனது முதல் அணு ஆயுதத்தைப் பரிசோதித்தது. மனிதத் தன்மையற்ற செயலென்று இன்று வரையிலுமே உலக நாடுகள் பேசிவரும் இந்தக் கொடூரத்திற்கு ஜப்பான் நிகழ்த்திய பெர்ல்-ஹார்பர் துறைமுகத் தாக்குதல்தான் காரணமென்று புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், ஜப்பானின் தொழில் புரட்சியும், அது அடைந்துவந்த பொருளாதார முன்னேற்றமும், அதனால் அமெரிக்கா அடைந்த இழப்புகளுமே இதற்குக் காரணமென்று தெரிந்தபோதுதான் மேலோட்டமாக நாம் புரிந்து வைத்திருப்பவையெல்லாம் வரலாறுகளே இல்லையென்று தெரிகிறது.


நேரடியாக Sound Cloudல் கேட்க : டாலர் தேசம்

அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் காலங்களில் எப்படி இந்த இரண்டு வல்லரசுகளின் "யார் பெரியவன்?" என்கிற சண்டைக்கு சின்னச் சின்னத் தேசங்களும், அதன் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும், குறிப்பாக வியட்நாம் போரின்போது அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி அரசுக்கு எதிரானதாக இருந்தது என்பதையும், அமெரிக்காவிற்கு எந்த அளவிலும் சமமில்லாத வியட்நாம் எப்படி அமெரிக்காவிற்கு எதிராக சுமார் 20 ஆண்டுக்காலம் போராட முடிந்தது என்பதும், வியட்நாமியர்களின் தேசத்தந்தையாகப் போற்றப்படும் ஹோசிமீன் எவ்வாறு அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமியர்களின் யுத்தத்தை ஒருங்கிணைத்தார் என்பதும் ஆச்சர்யமான வரலாறு.

ஆப்கன் யுத்தம் குறித்தும், வளைகுடா யுத்தம் குறித்தும், சதாம் உசேன் மீதான யுத்தம் குறித்தும் அமெரிக்கா உருவாக்கியிருக்கும் பொய்கள் என்னென்ன, உண்மையில் யுத்த காலங்களில் எவ்விதம் ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அமெரிக்கச் சார்புச் செய்திகள் மட்டுமே உலகிற்குத் தெரிவிக்கப்பட்டன என்பதும் அமெரிக்காவைக் குறித்து எனக்குள் இருந்த பிம்பத்தை உடைத்தெறிந்தது.

க்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் பிடிவாதம்தான் அமெரிக்காவின் எதிரி நாடாக க்யூபா உருவானதற்குக் காரணமென்று இதுவரையிலும் நினைத்திருந்த எனக்கு, எந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிரான நிலையினை எடுத்தார் என்றும், அமெரிக்காவுடன் இணக்கமான உறவைப் பேன நினைத்திருந்த பிடல் காஸ்ட்ரோவை எவ்விதமாக அமெரிக்காவின் நிரந்தர எதிரியாக அமெரிக்காவே உருவாக்கியது என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐநூறு ஆண்டுகளில் அமெரிக்கா அடைந்திருக்கும் உயரங்களுக்கும், அதன் அறிவியல் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் அரசியல் தலைவர்கள் எவ்விதமாக வழிநடத்தினார்கள், உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு என்கிற நிலையை அடைவதற்கு அந்த தேசம் செய்த போர்கள், சூழ்ச்சிகள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என்னென்ன என்பது குறித்தும், அறிவியல் வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், அது எவ்விதமாக உலக முதலீட்டாளர்களை ஈர்த்தது என்பது குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ள நிச்சயமாக டாலர் தேசம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர் : பா.ராகவன்.
பதிப்பகம் : கிழக்கு.
ஆன்லைனில் வாங்க : டாலர் தேசம்.Sunday, July 19, 2015

எனது இந்தியாசாதிச் சண்டைகளும், சாதிப் பாகுபாடுகள் சார்ந்த கொடூரக் கொலைகளும் தினசரிச் செய்திகளாகிவரும் சமகாலத்தில் எளியவர்கள் மீது வலியவர்களுக்கு இருக்க வேண்டிய கரிசனம் குறித்துப் பேச எந்த அருகதையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆங்கிலேயர்களைக் குறித்து நம் இந்தியச் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக ஒரு பிம்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா. எண்ணற்ற சாதிய அடுக்குகளைக் கொண்ட இந்திய மண்ணில் இந்தியாவின் உண்மையான ஏழை, எளிய மக்களோடு வாழ்ந்த தனது அனுபவங்களை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1952 ஆம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தினைத் தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்துள்ளார். "இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்" என்று பெருமிதமாகக் கூறும் ஜிம் கார்பெட் தனது காலத்திய இந்திய மக்களையும், வாழ்க்கை முறையையும் மிகத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இழைந்தோடும் தோழமை உணர்வும், அன்பும், எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது அவர் கொண்டிருந்த கருணையும் கண்ணீரையும், இனம் புரியாத சிலிர்ப்பையும் ஏற்படுத்திச் செல்கிறது. 1875 ஆம் ஆண்டு இமயமலைப் பிரதேசத்தின் உத்ரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் பிறந்த ஜிம் இந்தியா சுதந்திரமடையும் வரையிலும் இந்தியாவில் வசித்தார். உத்ரகாண்டின் குமாவுன் பகுதியில் இருந்த ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி கிராமத்தின் பாதுகாவலராகத் திகழ்ந்த அதே சமயத்தில் வேட்டையின்பத்திற்காக உயிர்களைக் கொல்லாத ஒப்பற்ற நேர்மையுணர்வு கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார்.

நேரடியாக சவுண்ட் கிளவுடில் கேட்க : எனது இந்தியா

இந்தியாவின் பெரும்பான்மையினரான ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை அறவுணர்வையும், விசுவாசத்தையும் மெச்சும் ஜிம் கார்பெட் தன் வாழ்வில் மறக்கவியலாத சம்பவங்களையும், மனிதர்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். சுமார் இருபது வருடங்கள் வடமேற்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணியாற்றிய ஜிம் கார்பெட் "எங்கள் ஜனங்கள்", "என் மக்கள்" என்று இந்திய மக்களைப் பற்றி எழுதும்போது தேசம், மொழி போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் மனித நேயத்தினை நாம் உணரமுடிகிறது.

எனது இந்தியா என்ற இந்த அனுபவக் குறிப்புகளில் மிக முக்கியமாக என்னைப் பாதித்த அம்சம் இதன் இலக்கியத் தரமான எழுத்து நடைதான். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கும் அன்பும், பாசமும், கருணையும் ஒருபக்கமிருக்க தன் வாழ்வில் தொடர்புடைய ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் ஜிம் விவரித்த விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

பெரும்பாலான என்பதை விடவும் எல்லாக் கட்டுரைகளுமே ஒருவித நெகிழ்ச்சியான சம்பவங்களையே மையமாகக் கொண்டிருப்பதால் நம்மையும் அறியாமல் அழ நேர்வதை எப்பாடுபட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை. தொடர்ந்து நான்கைந்து தடவைகள் வாசித்தாலும் ஒவ்வொரு வாசிப்பின் போதும் அழவும், அதே சமயத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படையான மனிதநேயம், கருணையுணர்வு போன்றவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கிற புத்தகமாக எனது இந்தியா விளங்குகிறது. 

யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு இது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம்தானா என்ற சந்தேகத்தை எழுப்புமளவிற்கு மிக நேர்த்தியாக மொழியாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் : எனது இந்தியா
ஆசிரியர் : ஜிம் கார்பெட்.(ஆங்கிலம்)
தமிழாக்கம் : யுவன் சந்திரசேகர்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : 200.

ஆன்லைனில் வாங்க

ஆங்கில மூலம் :   MY INDIA


Thursday, April 2, 2015

மதில்கள்

உயிரோட்டமான கதை எப்படியிருக்கும்? அப்படி உயிரோட்டத்துடன் எழுதப்பட்ட கதையையோ நாவலையோ வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் எப்படியிருக்கும்? அப்படியாக அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அன்பினையும், காதலையும் நிரப்பி எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றிய மதிப்புரைதான் மதில்கள் மதிப்புரை.மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மதிலுகள் என்ற குறுநாவலினைத் தமிழில் மதில்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல், சிறைச்சாலையில் உணர்வும், உயிருமற்ற மதில்கள் இடைநிற்க அதனைத் தாண்டி வளரும் காதலினை மையமாகக் கொண்டது.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு வருகிறார் பஷீர். 

சிறைச்சாலைக்குள் நுழைகின்றபோதே பெண்ணின் வாசனையை உணர்ந்துகொள்ளும் பஷீர் அது எங்கிருந்து வருகிறதென்று காவலரிடம் கேட்க, பெண்கள் சிறைச்சாலையிலிருந்து வருவதாகவும், அதற்கு அருகில்தான் பஷீரின் சிறையும் இருப்பதாகவும் கூறுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஓரிரு முறைகள் காற்றில் சுவாசம் பிடித்துப் பார்த்தும் பெண்ணின் வாசனையை அவரால் அடையாளம் காணமுடியாமல் போகிறது. பிறகு, அதனை மறந்தும்விடுகிறார்.Sound cloudல் நேரடியாகக் கேட்க மதில்கள்!

சிறைச்சாலைக்குள் வந்ததிலிருந்து அவருக்கும் மற்ற கைதிகள், சிறைக்காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஏற்படும் பிரியத்தினைப் பற்றியும் வெகு இயல்பாகச் சித்திரத்திருக்கிறார். ஏற்கெனவே பலமுறை சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் இந்தமுறை சிறைவாசம் இலக்கியத்திற்கானதென்று ஆரம்பத்திலேயே கூறிக் கொள்வதாலோ என்னவோ நாவல் முழுவதிலும் எல்லோர் மீதும் அன்பினை அள்ளித் தெளித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையிலும் இவையெல்லாம் கதையின் ஆரம்பக்கட்டம் மட்டுமே. 

சிறையிலிருக்கும் எல்லாக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் பஷீரின் மீது பெரும் ப்ரியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் பஷீருடன் இருந்த மற்ற அரசியல் கைதிகள் விடுதலையாகிச் செல்கின்றனர். அந்தச் சமயத்தில் பஷீர் மட்டும் தனியே சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. உலகமே சூன்யமாகிப் போனதாகக் கற்பனை செய்துகொண்டு, சிறையிலிருந்து தப்பிக்க நினைத்துச் சிற்சில யோசனைகளைச் செய்து கொண்டே, தனிமையில் மரங்களுடனும், அணில்களுடனும் பேசவும், சீட்டியடிக்கவும் செய்கிறார். 

சீழ்க்கைச் சத்தத்தினைக் கேட்டதும், சிறைச்சாலையின் மதிற்சுவரின் மறுபக்கத்திலிருந்து பெண்ணின் குரல் வருகிறது. " யாரு அங்கே சீட்டியடிக்கிறது?" என்ற கேள்வியைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள்தான் நாவலினைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது.

பெண்கள் ஜெயிலிலிருக்கும் நாராயணிக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் மதிலினைத் தாண்டி காதல் மலர்கிறது. இவர்களின் காதலுக்குச் சாட்சியாகவும், அதே சமயத்தில் பெரும் எதிரியாகவும் இந்த மதில் நிற்கிறது. நாவலின் பக்கங்கள் நகர நகர எங்கே இவர்களின் காதலால் இந்த மதில் உயிர்பெற்றுப் பெயர்ந்து விழுந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நாராயணியின் நுழைவிற்குப் பிறகுதான் மதில்கள் நாவலே பெரும் கவர்ச்சிக்குள்ளாகிறது. நாராயணியின் வரவுக்குப் பிறகுதான் பஷீரும் கூடத் தனது சிறையினைச் சுத்தம் செய்கிறார். 

"எனக்கொரு ரோஜாச் செடி குடுப்பீங்களா? ", " இன்னிக்கு உங்களுக்காக அழுவேன்", " நாம தூரத்திலே நின்னாவது ஒருதடவை பார்த்தாப்போதும் " என்ற உரையாடல்களில் புத்தகத்திற்குள்ளாகவே ஒரு திரை உருவாகி, அதில் பஷீரும், நாராயணியும், இடையே இடைஞ்சலாய் நிற்கும் மதிலும் திரும்பத் திரும்ப வந்துபோய் காதலின் மென் சோகத்தினை நமக்குள் பரவச் செய்கின்றன.

நாராயணிக்கும் பஷீருக்குமான உரையாடல்கள் மொத்தத்திலும் காதல் நிரம்பிவழிகிறது. நாராயணிக்குக் கொடுப்பதற்கு முன்பாக பஷீர் அந்த ரோஜாச் செடியின் ஒவ்வொரு தளிருக்கும், ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு இலைக்கும் முத்தம் கொடுக்கும் காட்சிதான் நாவலின்/காதலின் உச்ச நிலை. 

பெண்ணிற்காக ஏங்கும் ஆணும், ஆணிற்காக ஏங்கும் பெண்ணும், எதுவுமறியாமல் இடையில் நிற்கும் மதிலும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வார்த்தையில் வடிக்கவியலாதவை. நேரில் சந்திக்கவிரும்பி, அதற்காகத் திட்டமிட்டு, அந்த நாளுக்காகக் காத்திருந்து, அந்த நாளுக்கு முன்னதாகவே பஷீருக்கு விடுதலைகிடைத்துவிட " ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ? ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?" என்று ஜெயிலரிடம் கேட்கும் கேள்வி நியாயமாகவே தோன்றுகிறது. 

நான் வாசித்த புத்தகங்களில்/ காதல் கதைகளில் பஷீரின் மதில்கள் எப்பொழுதும் பசுமையாகவே நினைவிலிருக்கும். நாவலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பழவிள ரமேசனின் " மதில்களின் பணிமனை" மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் " வாக்கும் நோக்கும்" இரண்டு கட்டுரைகளும் மதில்கள் நாவலுக்கு மிக முக்கியமான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர். ( மலையாளம்)
தமிழாக்கம் : சுகுமாரன்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : ரூ.65

ஆன்லைனில் வாங்க :      

Monday, January 26, 2015

இரவு - எலீ வீசல்

ஒரு ஊரில் ஒரு எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

(மேற்கண்ட கவிதை காலச்சுவடு ஜூலை 2014 இதழில் பிரசாந்தி சேகர் அவர்கள் எழுதிய ஔஷ்விற்ஸ் கவிதைகள் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது)

உலகின் மிகப் பண்பட்ட மக்களைக் கொண்ட தேசங்களாகப் போற்றப்படும் ஐரோப்பியர்களின் இனவெறிப் போராட்டத்தினை யாரும் மறந்திருக்கமுடியாது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னதாக இரண்டாம் உலகப் போர் துவங்கி முடியும் வரையிலும் (1941 - 1945) ஐரோப்பாவில் இருந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் - 60 லட்சம் பேர் - ஹோலோகஸ்ட் என்னும் அழித்தொழிப்பு முறையினால் தகன உலைகளிலும், விஷவாயுக் கூடங்களிலும் கொல்லப்பட்டனர். ஹிட்லர் தனது பிரசங்கங்களின் மூலமாக  இனவெறியை மக்களிடம் தூண்டிவிட்டதுடன் ஆரியர் அல்லாத யூதர்கள், ரோமானியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் முற்று முழுதாக ஐரோப்பாவில் இருந்து அழிக்கப்பட வேண்டுமென ஆடிய பேயாட்டம் ஒரு கோடிக்கும் மேலான அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கியது.


நேரடியாக sound cloud ல் கேட்க இங்கே தொடவும்.

தனது பதினைந்தாவது வயதில் தனது சொந்த ஊரிலிருந்து ஆஸ்விட்ஸ் வதை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டத்திலிருந்து, புனா மற்றும் புச்சன்வால்ட் வதை முகாம்களில் தானும் தனது குடும்பமும் எதிர்கொண்ட கொடுமைகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் எலீ வீசல். ஆஸ்விட்ச் வதை முகாமில் தன் கண்ணெதிரிலேயே தனது தாயும், இளைய சகோதரி ஜிபோராவும் தகன உலைக்கு எரிபொருளாவதைக் காண நேர்ந்ததது முதல் தனது தந்தையின் மரணத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு ஆன்மா அழிந்துபோய் ஒரு வயிராக, பசியெடுக்கும் வயிராக மட்டுமே வாழ்ந்த நிஜத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாஜிப் படையினரின் இன அழிப்புப் பேயாட்டத்தினை இரவு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. கற்பனையும் செய்ய முடிந்திராத அளவிற்கு மனிதர்களுக்குள் இத்தனை வன்மம் இருக்கமுடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்த பக்கங்களில் அதனை விடக் கொடூரமான சம்பவங்களைப் படிக்க நேரும்போது இதனை நிகழ்த்தியவர்கள், நிகழக் காரணமாயிருந்தவர்கள் என எல்லோருமே மனிதர்களாகவே இருக்கமுடியாதென்ற வெறுப்பும், பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது.

தகன உலைகளில் உயிருடன் மனிதர்களைப் போடுவது, குழந்தைகளை மேலே வீசியெறிந்து சுட்டு வீழ்த்துவது, விஷவாயுக் கூடங்களில் மனிதர்களை அடைத்துக் கொல்வது, பட்டினியால் இறக்க விடுவது, கடும் குளிரில் நிர்வாணமாக நெடுந்தொலைவு நடக்கவிடுவது, நடக்க இயலாதவர்களைச் சுட்டு வீழ்த்துவது, கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலில் மிக நெருக்கமாக மனிதர்களை அடைத்து வைத்து தொடர்ந்து பயணம் செய்ய வைப்பது, நெரிசலில் இறந்தவர்களை அங்கங்கே வயல்வெளிகளில் வீசிவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என்பதாக நாஜிப் படைகள் செய்த கொடுமைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் இந்த நூலினைப் படித்து முடித்துவிடுவதென்பது அசாதாரணமானது. பக்கங்கள் குறைவுதானென்றாலும் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் கற்பனை செய்து பார்க்கையில் அதற்கு மேலும் தொடர்ந்து வாசிப்பதென்பது சாத்தியமற்றதாகிறது. பூமி உருவான காலத்திலிருந்தே கூட இப்படியொரு பேரழிவினை யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாதென்பதுதான் உண்மை.

எலீ வீசலின் இந்த நூலினைத் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ரவி இளங்கோவன். யுனைட்டட் ரைட்டர்ஸ் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்கள். விலை ரூ.70. பக்கங்கள் : 126. ( பின்ணினைப்பான நாஜி வதைமுகாம் குறித்த ஓவியங்கள் தவிர்த்து )