Sunday, July 19, 2015

எனது இந்தியாசாதிச் சண்டைகளும், சாதிப் பாகுபாடுகள் சார்ந்த கொடூரக் கொலைகளும் தினசரிச் செய்திகளாகிவரும் சமகாலத்தில் எளியவர்கள் மீது வலியவர்களுக்கு இருக்க வேண்டிய கரிசனம் குறித்துப் பேச எந்த அருகதையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆங்கிலேயர்களைக் குறித்து நம் இந்தியச் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக ஒரு பிம்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா. எண்ணற்ற சாதிய அடுக்குகளைக் கொண்ட இந்திய மண்ணில் இந்தியாவின் உண்மையான ஏழை, எளிய மக்களோடு வாழ்ந்த தனது அனுபவங்களை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1952 ஆம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தினைத் தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்துள்ளார். "இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்" என்று பெருமிதமாகக் கூறும் ஜிம் கார்பெட் தனது காலத்திய இந்திய மக்களையும், வாழ்க்கை முறையையும் மிகத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இழைந்தோடும் தோழமை உணர்வும், அன்பும், எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது அவர் கொண்டிருந்த கருணையும் கண்ணீரையும், இனம் புரியாத சிலிர்ப்பையும் ஏற்படுத்திச் செல்கிறது. 1875 ஆம் ஆண்டு இமயமலைப் பிரதேசத்தின் உத்ரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் பிறந்த ஜிம் இந்தியா சுதந்திரமடையும் வரையிலும் இந்தியாவில் வசித்தார். உத்ரகாண்டின் குமாவுன் பகுதியில் இருந்த ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி கிராமத்தின் பாதுகாவலராகத் திகழ்ந்த அதே சமயத்தில் வேட்டையின்பத்திற்காக உயிர்களைக் கொல்லாத ஒப்பற்ற நேர்மையுணர்வு கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார்.

நேரடியாக சவுண்ட் கிளவுடில் கேட்க : எனது இந்தியா

இந்தியாவின் பெரும்பான்மையினரான ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை அறவுணர்வையும், விசுவாசத்தையும் மெச்சும் ஜிம் கார்பெட் தன் வாழ்வில் மறக்கவியலாத சம்பவங்களையும், மனிதர்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். சுமார் இருபது வருடங்கள் வடமேற்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணியாற்றிய ஜிம் கார்பெட் "எங்கள் ஜனங்கள்", "என் மக்கள்" என்று இந்திய மக்களைப் பற்றி எழுதும்போது தேசம், மொழி போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் மனித நேயத்தினை நாம் உணரமுடிகிறது.

எனது இந்தியா என்ற இந்த அனுபவக் குறிப்புகளில் மிக முக்கியமாக என்னைப் பாதித்த அம்சம் இதன் இலக்கியத் தரமான எழுத்து நடைதான். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கும் அன்பும், பாசமும், கருணையும் ஒருபக்கமிருக்க தன் வாழ்வில் தொடர்புடைய ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் ஜிம் விவரித்த விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

பெரும்பாலான என்பதை விடவும் எல்லாக் கட்டுரைகளுமே ஒருவித நெகிழ்ச்சியான சம்பவங்களையே மையமாகக் கொண்டிருப்பதால் நம்மையும் அறியாமல் அழ நேர்வதை எப்பாடுபட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை. தொடர்ந்து நான்கைந்து தடவைகள் வாசித்தாலும் ஒவ்வொரு வாசிப்பின் போதும் அழவும், அதே சமயத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படையான மனிதநேயம், கருணையுணர்வு போன்றவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கிற புத்தகமாக எனது இந்தியா விளங்குகிறது. 

யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு இது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம்தானா என்ற சந்தேகத்தை எழுப்புமளவிற்கு மிக நேர்த்தியாக மொழியாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் : எனது இந்தியா
ஆசிரியர் : ஜிம் கார்பெட்.(ஆங்கிலம்)
தமிழாக்கம் : யுவன் சந்திரசேகர்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : 200.

ஆன்லைனில் வாங்க

ஆங்கில மூலம் :   MY INDIA


No comments:

Post a Comment