Thursday, April 2, 2015

மதில்கள்

உயிரோட்டமான கதை எப்படியிருக்கும்? அப்படி உயிரோட்டத்துடன் எழுதப்பட்ட கதையையோ நாவலையோ வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் எப்படியிருக்கும்? அப்படியாக அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அன்பினையும், காதலையும் நிரப்பி எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றிய மதிப்புரைதான் மதில்கள் மதிப்புரை.



மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மதிலுகள் என்ற குறுநாவலினைத் தமிழில் மதில்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல், சிறைச்சாலையில் உணர்வும், உயிருமற்ற மதில்கள் இடைநிற்க அதனைத் தாண்டி வளரும் காதலினை மையமாகக் கொண்டது.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு வருகிறார் பஷீர். 

சிறைச்சாலைக்குள் நுழைகின்றபோதே பெண்ணின் வாசனையை உணர்ந்துகொள்ளும் பஷீர் அது எங்கிருந்து வருகிறதென்று காவலரிடம் கேட்க, பெண்கள் சிறைச்சாலையிலிருந்து வருவதாகவும், அதற்கு அருகில்தான் பஷீரின் சிறையும் இருப்பதாகவும் கூறுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஓரிரு முறைகள் காற்றில் சுவாசம் பிடித்துப் பார்த்தும் பெண்ணின் வாசனையை அவரால் அடையாளம் காணமுடியாமல் போகிறது. பிறகு, அதனை மறந்தும்விடுகிறார்.



Sound cloudல் நேரடியாகக் கேட்க மதில்கள்!

சிறைச்சாலைக்குள் வந்ததிலிருந்து அவருக்கும் மற்ற கைதிகள், சிறைக்காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஏற்படும் பிரியத்தினைப் பற்றியும் வெகு இயல்பாகச் சித்திரத்திருக்கிறார். ஏற்கெனவே பலமுறை சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் இந்தமுறை சிறைவாசம் இலக்கியத்திற்கானதென்று ஆரம்பத்திலேயே கூறிக் கொள்வதாலோ என்னவோ நாவல் முழுவதிலும் எல்லோர் மீதும் அன்பினை அள்ளித் தெளித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையிலும் இவையெல்லாம் கதையின் ஆரம்பக்கட்டம் மட்டுமே. 

சிறையிலிருக்கும் எல்லாக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் பஷீரின் மீது பெரும் ப்ரியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் பஷீருடன் இருந்த மற்ற அரசியல் கைதிகள் விடுதலையாகிச் செல்கின்றனர். அந்தச் சமயத்தில் பஷீர் மட்டும் தனியே சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. உலகமே சூன்யமாகிப் போனதாகக் கற்பனை செய்துகொண்டு, சிறையிலிருந்து தப்பிக்க நினைத்துச் சிற்சில யோசனைகளைச் செய்து கொண்டே, தனிமையில் மரங்களுடனும், அணில்களுடனும் பேசவும், சீட்டியடிக்கவும் செய்கிறார். 

சீழ்க்கைச் சத்தத்தினைக் கேட்டதும், சிறைச்சாலையின் மதிற்சுவரின் மறுபக்கத்திலிருந்து பெண்ணின் குரல் வருகிறது. " யாரு அங்கே சீட்டியடிக்கிறது?" என்ற கேள்வியைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள்தான் நாவலினைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது.

பெண்கள் ஜெயிலிலிருக்கும் நாராயணிக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் மதிலினைத் தாண்டி காதல் மலர்கிறது. இவர்களின் காதலுக்குச் சாட்சியாகவும், அதே சமயத்தில் பெரும் எதிரியாகவும் இந்த மதில் நிற்கிறது. நாவலின் பக்கங்கள் நகர நகர எங்கே இவர்களின் காதலால் இந்த மதில் உயிர்பெற்றுப் பெயர்ந்து விழுந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நாராயணியின் நுழைவிற்குப் பிறகுதான் மதில்கள் நாவலே பெரும் கவர்ச்சிக்குள்ளாகிறது. நாராயணியின் வரவுக்குப் பிறகுதான் பஷீரும் கூடத் தனது சிறையினைச் சுத்தம் செய்கிறார். 

"எனக்கொரு ரோஜாச் செடி குடுப்பீங்களா? ", " இன்னிக்கு உங்களுக்காக அழுவேன்", " நாம தூரத்திலே நின்னாவது ஒருதடவை பார்த்தாப்போதும் " என்ற உரையாடல்களில் புத்தகத்திற்குள்ளாகவே ஒரு திரை உருவாகி, அதில் பஷீரும், நாராயணியும், இடையே இடைஞ்சலாய் நிற்கும் மதிலும் திரும்பத் திரும்ப வந்துபோய் காதலின் மென் சோகத்தினை நமக்குள் பரவச் செய்கின்றன.

நாராயணிக்கும் பஷீருக்குமான உரையாடல்கள் மொத்தத்திலும் காதல் நிரம்பிவழிகிறது. நாராயணிக்குக் கொடுப்பதற்கு முன்பாக பஷீர் அந்த ரோஜாச் செடியின் ஒவ்வொரு தளிருக்கும், ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு இலைக்கும் முத்தம் கொடுக்கும் காட்சிதான் நாவலின்/காதலின் உச்ச நிலை. 

பெண்ணிற்காக ஏங்கும் ஆணும், ஆணிற்காக ஏங்கும் பெண்ணும், எதுவுமறியாமல் இடையில் நிற்கும் மதிலும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வார்த்தையில் வடிக்கவியலாதவை. நேரில் சந்திக்கவிரும்பி, அதற்காகத் திட்டமிட்டு, அந்த நாளுக்காகக் காத்திருந்து, அந்த நாளுக்கு முன்னதாகவே பஷீருக்கு விடுதலைகிடைத்துவிட " ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ? ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?" என்று ஜெயிலரிடம் கேட்கும் கேள்வி நியாயமாகவே தோன்றுகிறது. 

நான் வாசித்த புத்தகங்களில்/ காதல் கதைகளில் பஷீரின் மதில்கள் எப்பொழுதும் பசுமையாகவே நினைவிலிருக்கும். நாவலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பழவிள ரமேசனின் " மதில்களின் பணிமனை" மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் " வாக்கும் நோக்கும்" இரண்டு கட்டுரைகளும் மதில்கள் நாவலுக்கு மிக முக்கியமான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர். ( மலையாளம்)
தமிழாக்கம் : சுகுமாரன்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : ரூ.65

ஆன்லைனில் வாங்க :      

Monday, January 26, 2015

இரவு - எலீ வீசல்

ஒரு ஊரில் ஒரு எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

(மேற்கண்ட கவிதை காலச்சுவடு ஜூலை 2014 இதழில் பிரசாந்தி சேகர் அவர்கள் எழுதிய ஔஷ்விற்ஸ் கவிதைகள் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது)

உலகின் மிகப் பண்பட்ட மக்களைக் கொண்ட தேசங்களாகப் போற்றப்படும் ஐரோப்பியர்களின் இனவெறிப் போராட்டத்தினை யாரும் மறந்திருக்கமுடியாது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னதாக இரண்டாம் உலகப் போர் துவங்கி முடியும் வரையிலும் (1941 - 1945) ஐரோப்பாவில் இருந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் - 60 லட்சம் பேர் - ஹோலோகஸ்ட் என்னும் அழித்தொழிப்பு முறையினால் தகன உலைகளிலும், விஷவாயுக் கூடங்களிலும் கொல்லப்பட்டனர். ஹிட்லர் தனது பிரசங்கங்களின் மூலமாக  இனவெறியை மக்களிடம் தூண்டிவிட்டதுடன் ஆரியர் அல்லாத யூதர்கள், ரோமானியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் முற்று முழுதாக ஐரோப்பாவில் இருந்து அழிக்கப்பட வேண்டுமென ஆடிய பேயாட்டம் ஒரு கோடிக்கும் மேலான அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கியது.


நேரடியாக sound cloud ல் கேட்க இங்கே தொடவும்.

தனது பதினைந்தாவது வயதில் தனது சொந்த ஊரிலிருந்து ஆஸ்விட்ஸ் வதை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டத்திலிருந்து, புனா மற்றும் புச்சன்வால்ட் வதை முகாம்களில் தானும் தனது குடும்பமும் எதிர்கொண்ட கொடுமைகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் எலீ வீசல். ஆஸ்விட்ச் வதை முகாமில் தன் கண்ணெதிரிலேயே தனது தாயும், இளைய சகோதரி ஜிபோராவும் தகன உலைக்கு எரிபொருளாவதைக் காண நேர்ந்ததது முதல் தனது தந்தையின் மரணத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு ஆன்மா அழிந்துபோய் ஒரு வயிராக, பசியெடுக்கும் வயிராக மட்டுமே வாழ்ந்த நிஜத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாஜிப் படையினரின் இன அழிப்புப் பேயாட்டத்தினை இரவு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. கற்பனையும் செய்ய முடிந்திராத அளவிற்கு மனிதர்களுக்குள் இத்தனை வன்மம் இருக்கமுடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்த பக்கங்களில் அதனை விடக் கொடூரமான சம்பவங்களைப் படிக்க நேரும்போது இதனை நிகழ்த்தியவர்கள், நிகழக் காரணமாயிருந்தவர்கள் என எல்லோருமே மனிதர்களாகவே இருக்கமுடியாதென்ற வெறுப்பும், பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது.

தகன உலைகளில் உயிருடன் மனிதர்களைப் போடுவது, குழந்தைகளை மேலே வீசியெறிந்து சுட்டு வீழ்த்துவது, விஷவாயுக் கூடங்களில் மனிதர்களை அடைத்துக் கொல்வது, பட்டினியால் இறக்க விடுவது, கடும் குளிரில் நிர்வாணமாக நெடுந்தொலைவு நடக்கவிடுவது, நடக்க இயலாதவர்களைச் சுட்டு வீழ்த்துவது, கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலில் மிக நெருக்கமாக மனிதர்களை அடைத்து வைத்து தொடர்ந்து பயணம் செய்ய வைப்பது, நெரிசலில் இறந்தவர்களை அங்கங்கே வயல்வெளிகளில் வீசிவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என்பதாக நாஜிப் படைகள் செய்த கொடுமைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் இந்த நூலினைப் படித்து முடித்துவிடுவதென்பது அசாதாரணமானது. பக்கங்கள் குறைவுதானென்றாலும் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் கற்பனை செய்து பார்க்கையில் அதற்கு மேலும் தொடர்ந்து வாசிப்பதென்பது சாத்தியமற்றதாகிறது. பூமி உருவான காலத்திலிருந்தே கூட இப்படியொரு பேரழிவினை யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாதென்பதுதான் உண்மை.

எலீ வீசலின் இந்த நூலினைத் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ரவி இளங்கோவன். யுனைட்டட் ரைட்டர்ஸ் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்கள். விலை ரூ.70. பக்கங்கள் : 126. ( பின்ணினைப்பான நாஜி வதைமுகாம் குறித்த ஓவியங்கள் தவிர்த்து )

Friday, October 3, 2014

கடவுள்

பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கேள்வியான கடவுள் என்பது என்ன மற்றும் ஏன் கடவுள் இருக்க வேண்டும், கடவுளின் இருப்பினைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? இந்த வகையறையிலான சிந்தனைகளை மையப்படுத்தி சுஜாதா அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக கடவுள் என்ற கட்டுரைத் தொகுப்பினை உயிர்மை பதிப்பகம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.





மொபைல் ப்ரவுசர்களில் இந்த ஆடியோவைக் கேட்க 



மொத்தம் ஐந்து கட்டுரைத் தொகுப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொகுப்பில் முறையே,

1.வணக்கம் இறைவா

2. கடவுள் இருக்கிறாரா?

3. என்ன ஆச்சர்யம்!

4. அறிவோம் சிந்திப்போம்.

5. ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து...



ஆகிய ஐந்து கட்டுரைத் தொடர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தின் ஆச்சர்யமான உயிரைப் பற்றியும், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் குறித்தும், அணு, அணுக்கரு குறித்தான தெளிவான அறிவியல் விளக்கங்களையும் உள்ளடக்கிய புத்தகமாக கடவுள் இருக்கிறது.

நவீன அறிவியல் கடவுளின் தேவையை எவ்வாறு மறுக்கிறது அல்லது கடவுளின் தேவையை எவ்வாறு இல்லாமல் ஆக்கிவிட்டது என்ற அடிப்படையில் ஆழ்ந்த சிந்தனைகளை வாசகர்களின் மனத்தில் உருவாக்குகிறது. மேலும் அறிவியலையும் மீறிய, அறிவியலால் விளக்கமுடியாத அதிசயங்கள் குறித்தும் என்ன ஆச்சர்யம் பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் கடவுள் குறித்த தெளிவான சிந்தனைகளை இந்தக் கட்டுரைத் தொகுப்பு உருவாக்கும் என்பதில் க்வார்க் அளவிலும் சந்தேகமில்லை.

எழுத்தாளார் : சுஜாதா.
பதிப்பகம் : உயிர்மை.
மொத்தப் பக்கங்கள் : 272.
விலை : 200/-