Sunday, June 2, 2019

இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஏன்?

இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது தானே? ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதாகச் சிலர் பேசிவருவதைக் காண முடிகிறது. நிச்சயம் நல்ல கேள்வி தான். இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அது இந்தியோ, சமஸ்கிருதமோ, கன்னடமோ, ஜாவாவோ, பைத்தானோ,பாரசீகமோ, பதினாறாம் வாய்ப்பாடோ!

ஆனால், இந்தியைக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் என்பதில் இருக்கும் பிரச்னைகள் புரியாமல் நம் முன்னேற்றத்தைத் தடுக்கவே அதனை எதிர்க்கிறார்கள் என்பதாகப் புரிந்து கொள்வது ஆபத்தானது. முதலில், நம் முன்னேற்றம் என்பதில் இருக்கும் நாம் யார் என்பது முக்கியமானது. உயர் சாதி, FC மக்களில் அந்த நாம் இல்லையென்பது முக்கியமானது. அவர்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களை விடவும் தெளிவாகக் கற்றுக்கொண்டு IELTS, TOEFL என்று போய்விட்டார்கள். அவர்களுக்கு இந்தித் திணிப்பைப் பற்றியெல்லாம் கவலை கொள்ள ஒன்றுமில்லை. மேலும், இந்தியை இந்தியாவிற்கான ஒரு பொது மொழியாக மாற்றுவதில் அவர்களுக்கு நிச்சயமாகப் பெரும் பலன்களும் இருக்கின்றன. அதனைப் பின்னால் பார்க்கலாம்.

பொருளாதார மற்றும் சாதிப் படிநிலையில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்கள் தான் அந்த நாம். நமக்கு இந்தித்திணிப்பால் நேரப்போகும் பிரச்னைகள் என்னவாக இருக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். நாமும், நம் அப்பா, அம்மா, தாத்தா அவரது தாத்தா என்று நமக்குத் தெரிந்த ஒரே மொழி தமிழ் தான். நானூறு ஆண்டுகளாக ஆங்கிலம் இருந்தாலும் இப்பொழுதுதான் நாம் அதனைக் கடுமையான இலக்கணப் பிழைகளுடன் மெதுவாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு மொழியை இப்பொழுதுதான் எழுதவும், கொஞ்சம் கொஞ்சமாகப் பேசவும் கற்றுக் கொள்கிற ஒரு தலைமுறை உருவாகிவருகிறது.

கிராமப்புற மற்றும் மத்திய நகர்ப்புற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பொழுதும் ஆங்கிலம் என்றால் பயம்தான். அந்தப் பயத்தையும் தாண்டித்தான் அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அது அவசியமானதும் கூட.  அவர்கள் பின்னாளில் படிக்கவிருக்கும் அனைத்துப் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் எல்லாமே ஆங்கிலத்தின் வாயிலாகத்தான் இருக்கும் என்பதால் ஆங்கிலம் தவிர்க்க இயலாதது மற்றும் தவிர்க்கக் கூடாததும் கூட.

கிட்டத்தட்ட LKG வகுப்புக்களில் இருந்து பத்துப் பதினைந்து வருடங்கள் ஆங்கிலத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பின்பும், பள்ளிக் கல்வியைத் தாண்டி, தாய்மொழி வழிக் கல்வியைத் தாண்டி, ஆங்கிலத்தில் பட்டப் படிப்புப் படிக்கச் செல்லும் பெரும்பான்மை மாணவர்களுக்கு இப்பொழுதும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆங்கில வழி நுழைவுத் தேர்வுகள், ஆங்கில வழிப் போட்டித் தேர்வுகள் என்று எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தை எதிர்கொள்ளும் போதும் இந்தப் பயம் இருக்கிறது. ஆனால், ஆங்கிலம் உலகப் பொது மொழி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை; நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சந்தேகமே இல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம்.

ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எளிமையாக இப்படித் திரிக்கலாம். இருபது வருடங்கள் ஆங்கிலத்தில் படித்தும் அதில் எழுதத் தெரியாமல், அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மாணவர்களின் திறன் இல்லாமை தானே, அவர்களின் விருப்பமில்லாமை தானே என்பதாகச் சொல்லலாம். அல்லது அவர்களுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்காத பள்ளிகளை, கல்விக் கொள்கைகளைக் குறை கூறலாம். பயிற்றுவிக்கும் முறையிலோ அல்லது கல்விக் கொள்கைகளிலோ மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக எல்லோரையும் ஒரு மொழியில் திறன் மிக்கவராக்கிவிடலாம் என்று கூறலாம். இதனை ஒரு அரசு செய்யும் புரட்சியாகவும், முன்னேற்றத்திற்கான அடிக்கல் என்பதாகவும் பிரச்சாரம் செய்யலாம். அதில் உண்மை இருப்பதைப் போலவே தான் தோன்றும். ஆனால், நாம் அந்நிய மொழிகளை நம் சுற்றத்தில் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. பேச்சு வழக்கில் இல்லை. நாம் பேசுகிற, நம்மோடு பேசுகிற எல்லாமே தாய்மொழியில் இருப்பதால் அந்நிய மொழிகளில் விற்பன்னராவது எளிதானதல்ல. மேலும் தேவையுமல்ல. தேவைப்படும்போது தேவைப்படுபவர் கற்றுக் கொள்ளவும் செய்வார்!

இந்தியை மொத்த நாட்டிற்குமான பொதுமொழி என்று சொல்வதை நாம் ஆங்கிலத்தை வைத்துப் புரிந்து கொள்வோம். இப்பொழுது ”இந்தியும் ஒரு மொழிதான சார், அதையும் சேர்த்துப் படிச்சுட்டா இன்னும் வடக்க போய் நிறைய சம்பாதிக்கலாம்ல, திராவிடக் கட்சிகள் அதை எதிர்த்து அரசியல் செய்யுறாங்க, நம்மை முன்னேறவே விட மாட்டாங்க” என்பதைப் பார்ப்போம்.

இத்தனை ஆண்டுகளாக ஆங்கிலம் இங்கே ஊன்றியிருந்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ எழுதவோ முடியாததற்குக் காரணம் அதன் மேலுள்ள வெறுப்போ, அரசியல் காரணங்களோ அல்ல. அது நம் அன்றாட வாழ்வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் நாம் பேசுகிற, புழங்குகிற கருவிகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலந்திருந்தாலும். தவிரவும் இப்பொழுதுதான் நம் பெரும்பான்மை கல்வி கற்க வருகிறது. அவர்களுக்கு அவர்கள் பேசுகிற, புழங்குகிற, அவர்கள் மொழியில் பாடங்களும், கேள்விகளும், தேர்வுகளும், அரசின் அறிவிப்புக்களும் இருப்பதுதான் அறம். அப்பொழுதான் போட்டித் தேர்வுகளை அச்சமின்றி அணுக முடியும். அதுவல்லாமல், திடீரென அறிமுகமற்ற ஒரு மொழியைக் கட்டாயமாக்கி, இனி உங்கள் தேர்வுகள் இந்த மொழியில் தான் இருக்கும் என்று கூறி வடிகட்டுவது ஜனநாயக முறையல்ல. இதைத்தான் திணிப்பு என்கிறோம். ஆனாலும், நாம் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறோம். இத்தனை தடைகள் இருந்தாலும் ஆங்கிலம் பெரும் திறவுகோல் என்பதால் அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்தி மொழியை மூன்றாம் மொழியாக இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக்குவதை ஏன் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இந்தியாவின் அலுவலகத் தொடர்பு மொழியாக இந்தியும், ஆங்கிலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் கிட்டத்தட்ட 50 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள். அந்த ஐம்பது கோடி மக்களிலுமே அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழியின் அடிப்படையில் பிரித்தால் இந்தியை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் என்று எதுவுமே இல்லை. ஆனாலும், இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் மொழி இந்தி என்பது உண்மைதான். பிராந்திய மொழிகளுடன் இந்தியும் சுமார் ஐம்பது கோடி மக்களால் பேசப்படுகிறது. மீதமிருக்கும் 80 கோடி மக்களுக்கு இந்தி தெரியாது. அவர்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். அதாவது படித்தவர்கள், மற்ற இந்திய மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள, ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கிலம் தான்.

அதிகமான மக்கள் பேசுகிற மொழியான இந்தியை இந்தியா முழுவதற்குமான பொது மொழியாக உருவாக்கும் முன்னெடுப்புகள் வெற்றியடைந்தால், அதன் பாதகங்கள் நம்மை மிகக் கடுமையாகப் பாதிக்கும். எப்படிப் பாதிக்கும்? NEET விவகாரத்தை வைத்துப் புரிந்து கொள்வோம். ஒருவேளை இந்தியா முழுமைக்கும் இந்தியைக் கற்றுத் தேர்வது கட்டாயம் என்ற நிலை வருமாயின், அடுத்தடுத்து பெரும்பான்மை அரசுகள் அமைகையில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வுகள் அமையும் என்ற சட்டம் வரலாம்! பிராந்திய மொழிகளை மட்டுமே பேசி, அதனைப் புரிந்து கொள்கிற மாநிலங்களில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் மிகக் கடுமையாகப் பாதிப்படையும்.

இந்தியை நாம் ஏற்றுக் கொண்டோமானால், இது நேரலாம். அதனை நம்மால் எதிர்க்கவும் முடியாது. எதிர்த்தால் அதே பழைய தர்க்கத்தை நம் முன்னால் வைப்பார்கள். இந்தியை எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாயிற்று. இன்னமும் கற்றுக் கொள்ளாதது மாணவர்களின் தவறு. அவர்கள் படிக்கும் மொழியில் இருந்துதான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முட்டாள் மாணவர்களுக்காக அரசின் கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாது. அறிவிருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவே தேர்வுகள். அறிவில்லாத மாணவர்களுக்காகப் போராடுவது சட்டத்திற்கு எதிரானது என்பதாக வாதங்கள் வைக்கப்படும். அப்பொழுதும் இதெல்லாம் சரிதானே என்று தோன்றும். நன்றாகப் படித்துப் பாருங்கள். பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட மொழியில் இருந்துதானே கேள்வி கேட்கிறோம் என்பதை எப்படி எதிர்க்க முடியும்? படிக்காதது யார் தவறு என்ற கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? எளிமையாக உங்களைச் சோம்பேறி என்றும், சட்டத்தை எதிர்க்கும் போராளி என்றும் கூறிவிட முடியும். இத்தனைக்கும் நாம் நம் சொந்த நாட்டில், சொந்த மொழியில் என் தேர்வுகளை எழுதவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் விரும்புகிறேன் என்கிற அடிப்படை உரிமையையே சட்டத்திற்கு எதிரானது என்பதாக உருவாக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மொழியைப் பயின்று, அதைப் பேசி வரும், அந்தச் சுற்றத்தில் வாழும் ஒரு மாணவனும், ஒரு சில வருடங்களாக இந்தியை வெறும் பாடப்புத்தகங்களில் மட்டும் படிக்கும் மாணவனும் ஒரே தேர்வெழுதி அதில் திறமையை நிரூபித்தல் என்பது எந்தவகையிலும் அறம் ஆகாது இல்லையா? சரி, இதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான, நிஜமாவே எந்த அரசும் இப்படிச் செய்யாது என்று தோன்றலாம். அப்படியே வைத்துக் கொள்வோம். நானும் அப்படியே நம்புகிறேன்.

சரி, ஒரு மூன்றாம் மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் தானே, ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற கேள்விக்கு வரலாம். பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்பதும், வடக்கிந்தியா முழுவதும் பேசுகிற மொழி என்கிற தர்க்கமும் நியாயமானதுதான். இந்தியைக் கற்றுக் கொள்வதை இப்பொழுது வரையிலும் யாரும் எதிர்க்கவே இல்லை என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது. அதனைக் கல்விக் கூடங்களில் கட்டாயப் பயிற்று மொழியாக, அரசு அலுவலங்களில் இன்னொரு மொழியாக சேர்ப்பதைத்தான் எதிர்க்கிறார்கள். காரணம் எளிமையானதுதான். கல்வி என்பது மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட எல்லா முன்னேறிய தேசங்களுமே தாய்மொழி வழியிலான கல்வியைத்தான் ஆதரிக்கிறார்கள்; கடைப்பிடிக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமானால், தமிழிலேயே எல்லாமும் இருக்குமானால் நமக்கு ஆங்கிலம் கூட அவசியமில்லை தான். ஜெர்மானியர்களைப் போல, ரஷ்யர்களைப் போல எல்லா தொழில்நுட்பமும் தாய்மொழியிலேயே கற்றுக் கொள்ளும் வசதியிருப்பின், எக்ஸ்ட்ராவாக இன்னொரு மொழியின் தேவையே நமக்கு இல்லை. உலகோடு தொடர்புகொள்ள மட்டும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். இங்கேயும் திரும்பவும் ஆங்கிலம் தான் தேவையாக இருக்கிறதே ஒழிய இந்தியோ, வேறு வடக்கிந்திய மொழிகளோ அல்ல.

யாரும் தாமாகப் போய் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள், அரசுதான் கற்றுத் தர வேண்டும். அதைப் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். இங்கே இந்தி கற்றுத் தந்து, அதில் தேர்வெழுதுவதில் ஏற்படும் பிரச்னைகளையும் கணக்கில் கொள்வது அவசியமாகிறது. ஏற்கெனவே நாம் ஆங்கிலத்தைத் திக்கித் திணறிக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அது அத்தியாவசியம் என்றாலும் அது சுமைதான். இதன் பொருள் சோம்பேறித்தனமோ, கற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வமின்மையோ அல்ல. நமக்குத் தொடர்பே இல்லாத ஒன்றை உள்வாங்குவதில் இருக்கும் பிரச்னைகளைச் சொல்கிறேன். பிதாகரஸ் தேற்றத்தையோ, ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தையோ நாம் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம். அதெல்லாம் இயற்பியல். கணிதவியல். அவையெல்லாம் நம் வாழ்வோடு தொடர்புள்ளவை. அவற்றை அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், ஒரு மொழியானது அப்படி அல்ல. அதன் தேவை தொடர்பு கொள்வது மட்டும் தானே தவிர வேறெந்த அவசியமும் அதற்கு இல்லை. அது ஐந்தாயிரம் வருட தமிழானாலும், மூன்றாயிரம் வருட இந்தியானாலும் ஒன்றுதான். அறிவுக்கும் மொழிக்கும் தொடர்பில்லை. தொடர்பு கொள்ளல் என்பதற்கும், வேலைவாய்ப்பு, பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றம் என்பதற்காகவும் தான் நாம் கற்றுக் கொள்கிறோம். இதில் ஆங்கிலம் முக்கியமா இந்தி முக்கியமா என்ற கேள்வி வருமாயின் கண்ணை மூடிக் கொண்டு ஆங்கிலத்தைத் தான் தேர்ந்தெடுக்க முடியும். ஏனென்றால், நாம் ஆங்கிலத்தை விடுத்து இந்தியைக் கற்றுக் கொள்கிறோம் என்று கொண்டால், அவர்கள் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை ஆங்கிலத்தில் இருந்து இந்திக்குக் கொண்டுவந்து அங்கிருந்து தமிழுக்கு கொண்டு வர வேண்டியிருக்கும். இதற்கு நேராக ஆங்கிலத்தில் நாமே படித்துக் கொள்ளலாமே என்பது தான் தர்க்கம்.

சரி, இந்தி படித்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னார்கள் என்று கேட்கத் தோன்றும். சரியான கேள்விதான். இப்பொழுதுதான் படிக்கவே வந்திருக்கிற பெரும்பாலான மக்களிடம் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகத் திணிப்பது அவர்கள் மேலும் மிரட்சி கொள்ளவே வழிவகுக்கும். யோசித்துப் பாருங்கள்; ஆங்கிலம் அல்லாது இந்தியை மட்டும் படித்துத் தெளிவதில் எந்தவிதமான நன்மையும் இல்லை. நாம் இந்தி படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆங்கிலம் படித்துத்தான் ஆக வேண்டும். சிரமப்பட்டுக் கற்றுக் கொள்வது என்பது வேறு. அத்தனை சிரமப்பட்டு ஒன்றைக் கற்றுக் கொள்வதால் விளையும் நன்மைகள் என்ன? பெரும்பான்மைக்கு எந்தவிதத்திலும் பெரும் நன்மைகளைத் தராத ஒரு மொழியை ஏன் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. இந்தி படிக்காமல் என் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று நினைப்போர் நிச்சயமாகத் தனியாகப் படித்துக் கொள்ளலாம் தானே? அவர்களை யார் இங்கே எதிர்க்கிறார்கள்?

இந்தித் திணிப்பை எதிர்த்தது நாம் பாராட்ட வேண்டிய சமூக நீதி முன்னெடுப்பு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். 1970 களில் ஒருவேளை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் இந்தியை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்கிற முடிவு எட்டப்பட்டிருக்குமாயின், இப்பொழுது நிச்சயமாக மத்திய அரசின் எல்லா அலுவல்களும், மத்திய அரசின் தேர்வுகளும் இந்தியிலேயே நடத்தபடுகின்ற சூழலுக்கு வந்திருக்கும். எப்படியாயினும், நமக்கு நானூறு வருட ஆங்கிலம் எப்படி இத்தனை நாட்களாகப் புரிபடாமல் இருக்கிறதோ அதே போலத்தான் இந்தியும் இருந்திருக்கும். அதாவது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு அது பெரும் மொழித் தடையாகத்தான் இருந்திருக்கும். அந்தச் சூழலில் மத்திய அரசின் எல்லாப் பணிகளிலும் இந்தி தெரிந்த, இந்தியை முதன்மை மொழியாகக் கொண்ட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்.

நம் மக்கள் சாதாரணமாக, இந்தி ஒரு மொழி என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ”அறிவிருக்கறவன் பரீட்சைல பாசாகி வேலைக்குப் போறான், உனக்கு பொறாமை அதான் அவனைக் குறை சொல்லிட்டு இருக்க” என்பதாக முடித்துக் கொள்வார்கள். வேலை வாய்ப்பை வழங்காத ஒரு கல்வியை ஏன் கற்க வேண்டும் என்று ஒரு பெரும்பான்மை நிச்சயமாக படிக்கவே வரமாட்டார்கள். மிக மிகச் சிரமப்பட்டுத்தான் நாம் நம் அடித்தட்டு மக்களைப் படிக்க அழைத்து வருகிறோம். இதெல்லாம் எலைட்டிச மனப்பான்மையில் இருந்து பார்த்தால் புரியாது. எட்டாம் வகுப்பு வரையிலும் எல்லோரும் தேர்ச்சி என்பது எல்லோரையும் திறன் குறைந்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அல்ல. நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பில் தேர்வு பெறாத இளம் குழந்தைகளை, அந்தத் தோல்வியைக் காட்டி, அவனை எதேனும் மெக்கானிக் ஷெட்களில் வேலைக்கு விட்டுவிடக்கூடாதே என்கிற அக்கறைதான். அறிவுக்கும் சமூக நீதிக்கும் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு, கல்வி இவைகள்தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்றால் அந்த தேசத்தின் எல்லா மக்களுக்கும் அதில் பங்கேற்கும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமையை நேரடியாகப் பறிக்க முடியாத நிலையில், இப்படி நமக்குத் தொடர்பல்லாத ஒரு மொழியின் மூலமாகப் பறிப்பதும் அநீதி தான்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏதோ பொழுதுபோக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ என்று நினைப்பது அறியாமையின் உச்சம். அது அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒரு அரசின் தவறினைச் சுட்டிக்காட்டும் போராட்டம். நம் நாட்டில், நம் மொழியில் படிக்கவும், தேர்வெழுதவும் நமக்கு உரிமைகள் உள்ளன. அதனைக் காப்பதற்கான எதிர்ப்புக்குரல்கள் தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பது. ஏன் தேர்வெழுதுதல் வரைக்கும் போக வேண்டி இருக்கிறது என்றால், அதன் நீட்சி அப்படி இருக்கலாம் என்பதால் தான். இந்தித் திணிப்பை எதிர்ப்பதால் தமிழகம் மட்டும் நன்மை பெறவில்லை. இந்தி பேசாத ஏனைய மாநிலத்தின் உரிமைகளுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்த மொழியில் நம் அரசு செயல்படுவது நம் அடிப்படை உரிமை. அந்த உரிமையைக் காக்கத்தான் குரல் கொடுக்கிறார்கள். நமக்குத் தமிழ் தான் தெரியும் என்பதற்காக நாம் மத்திய அரசும் தமிழிலேயே இயங்க வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா என்கிற இந்த தேசத்தின் அழகியல் என்பதே அது ஒற்றைத் தேசியம் இல்லை என்பது தான்.  ஒரே மொழி பேசுகிற மக்கள் என்கிற அடையாளமோ, ஒரே மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் என்கிற அடையாளமோ இல்லாமல் ஒரு நாடாக இணைந்திருப்பதன் அழகியல் உலகில் வேறெங்கும் காணமுடியாது. இதனைப் புரிந்து கொள்வோம். இந்தி கற்பதால் தான் நம் வாழ்க்கை மேம்பாடடையும் என்று நம்புகிற எவரும் இப்பொழுதே இந்தி கற்கத் துவங்குங்கள். தமிழைப்போல, ஆங்கிலத்தைப் போல அதுவும் ஒரு மொழி. ஆனால், அதனை எல்லோரும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் இருக்கும் வன்முறையையும் புரிந்து கொள்ளுங்கள்!