Thursday, April 2, 2015

மதில்கள்

உயிரோட்டமான கதை எப்படியிருக்கும்? அப்படி உயிரோட்டத்துடன் எழுதப்பட்ட கதையையோ நாவலையோ வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் எப்படியிருக்கும்? அப்படியாக அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அன்பினையும், காதலையும் நிரப்பி எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றிய மதிப்புரைதான் மதில்கள் மதிப்புரை.



மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மதிலுகள் என்ற குறுநாவலினைத் தமிழில் மதில்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல், சிறைச்சாலையில் உணர்வும், உயிருமற்ற மதில்கள் இடைநிற்க அதனைத் தாண்டி வளரும் காதலினை மையமாகக் கொண்டது.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு வருகிறார் பஷீர். 

சிறைச்சாலைக்குள் நுழைகின்றபோதே பெண்ணின் வாசனையை உணர்ந்துகொள்ளும் பஷீர் அது எங்கிருந்து வருகிறதென்று காவலரிடம் கேட்க, பெண்கள் சிறைச்சாலையிலிருந்து வருவதாகவும், அதற்கு அருகில்தான் பஷீரின் சிறையும் இருப்பதாகவும் கூறுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஓரிரு முறைகள் காற்றில் சுவாசம் பிடித்துப் பார்த்தும் பெண்ணின் வாசனையை அவரால் அடையாளம் காணமுடியாமல் போகிறது. பிறகு, அதனை மறந்தும்விடுகிறார்.



Sound cloudல் நேரடியாகக் கேட்க மதில்கள்!

சிறைச்சாலைக்குள் வந்ததிலிருந்து அவருக்கும் மற்ற கைதிகள், சிறைக்காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஏற்படும் பிரியத்தினைப் பற்றியும் வெகு இயல்பாகச் சித்திரத்திருக்கிறார். ஏற்கெனவே பலமுறை சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் இந்தமுறை சிறைவாசம் இலக்கியத்திற்கானதென்று ஆரம்பத்திலேயே கூறிக் கொள்வதாலோ என்னவோ நாவல் முழுவதிலும் எல்லோர் மீதும் அன்பினை அள்ளித் தெளித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையிலும் இவையெல்லாம் கதையின் ஆரம்பக்கட்டம் மட்டுமே. 

சிறையிலிருக்கும் எல்லாக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் பஷீரின் மீது பெரும் ப்ரியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் பஷீருடன் இருந்த மற்ற அரசியல் கைதிகள் விடுதலையாகிச் செல்கின்றனர். அந்தச் சமயத்தில் பஷீர் மட்டும் தனியே சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. உலகமே சூன்யமாகிப் போனதாகக் கற்பனை செய்துகொண்டு, சிறையிலிருந்து தப்பிக்க நினைத்துச் சிற்சில யோசனைகளைச் செய்து கொண்டே, தனிமையில் மரங்களுடனும், அணில்களுடனும் பேசவும், சீட்டியடிக்கவும் செய்கிறார். 

சீழ்க்கைச் சத்தத்தினைக் கேட்டதும், சிறைச்சாலையின் மதிற்சுவரின் மறுபக்கத்திலிருந்து பெண்ணின் குரல் வருகிறது. " யாரு அங்கே சீட்டியடிக்கிறது?" என்ற கேள்வியைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள்தான் நாவலினைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது.

பெண்கள் ஜெயிலிலிருக்கும் நாராயணிக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் மதிலினைத் தாண்டி காதல் மலர்கிறது. இவர்களின் காதலுக்குச் சாட்சியாகவும், அதே சமயத்தில் பெரும் எதிரியாகவும் இந்த மதில் நிற்கிறது. நாவலின் பக்கங்கள் நகர நகர எங்கே இவர்களின் காதலால் இந்த மதில் உயிர்பெற்றுப் பெயர்ந்து விழுந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நாராயணியின் நுழைவிற்குப் பிறகுதான் மதில்கள் நாவலே பெரும் கவர்ச்சிக்குள்ளாகிறது. நாராயணியின் வரவுக்குப் பிறகுதான் பஷீரும் கூடத் தனது சிறையினைச் சுத்தம் செய்கிறார். 

"எனக்கொரு ரோஜாச் செடி குடுப்பீங்களா? ", " இன்னிக்கு உங்களுக்காக அழுவேன்", " நாம தூரத்திலே நின்னாவது ஒருதடவை பார்த்தாப்போதும் " என்ற உரையாடல்களில் புத்தகத்திற்குள்ளாகவே ஒரு திரை உருவாகி, அதில் பஷீரும், நாராயணியும், இடையே இடைஞ்சலாய் நிற்கும் மதிலும் திரும்பத் திரும்ப வந்துபோய் காதலின் மென் சோகத்தினை நமக்குள் பரவச் செய்கின்றன.

நாராயணிக்கும் பஷீருக்குமான உரையாடல்கள் மொத்தத்திலும் காதல் நிரம்பிவழிகிறது. நாராயணிக்குக் கொடுப்பதற்கு முன்பாக பஷீர் அந்த ரோஜாச் செடியின் ஒவ்வொரு தளிருக்கும், ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு இலைக்கும் முத்தம் கொடுக்கும் காட்சிதான் நாவலின்/காதலின் உச்ச நிலை. 

பெண்ணிற்காக ஏங்கும் ஆணும், ஆணிற்காக ஏங்கும் பெண்ணும், எதுவுமறியாமல் இடையில் நிற்கும் மதிலும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வார்த்தையில் வடிக்கவியலாதவை. நேரில் சந்திக்கவிரும்பி, அதற்காகத் திட்டமிட்டு, அந்த நாளுக்காகக் காத்திருந்து, அந்த நாளுக்கு முன்னதாகவே பஷீருக்கு விடுதலைகிடைத்துவிட " ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ? ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?" என்று ஜெயிலரிடம் கேட்கும் கேள்வி நியாயமாகவே தோன்றுகிறது. 

நான் வாசித்த புத்தகங்களில்/ காதல் கதைகளில் பஷீரின் மதில்கள் எப்பொழுதும் பசுமையாகவே நினைவிலிருக்கும். நாவலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பழவிள ரமேசனின் " மதில்களின் பணிமனை" மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் " வாக்கும் நோக்கும்" இரண்டு கட்டுரைகளும் மதில்கள் நாவலுக்கு மிக முக்கியமான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர். ( மலையாளம்)
தமிழாக்கம் : சுகுமாரன்.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : ரூ.65

ஆன்லைனில் வாங்க :